நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

குடற்புண்

இன்றைய அவசர உலகில் நம்மில் அநேகர் சாப்பிடக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. கண்ட இடங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
சாப்பிடுவது, அல்லது நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது என மாறுபட்ட உணவுப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளளோம். இதனால் அவ்வப்போது உணவு
செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலம் கிரகிப்பதற்கு உணவு இல்லாமல் வயிற்றிலுள்ள சளிச்சவ்வை கிரகித்து புண்ணை ஏற்படுத்துகிறது. இதற்கு
ஆங்கிலத்தில் அல்சர் என்று பெயர் வழங்கப்படுகிறது. இது பாரபட்சமின்றி பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாகும். இதனையே
சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குன்மம் என்று அழைக்கின்றனர்.

‘குன்மம்’ என்ற சொல் குல்மம் - புதர் என்ற வடமொழிச் சொல்லின் சிதைவு.

வலி வரும்போது நோயினால் முன்பக்கம் குன்றவைக்கும் காரணத்தினால் இதனை குன்ம நோய் என்றும் கூறுவர்.

குன்மம் ஏற்பட காரணங்களாக சொல்லப் படுபவை

நேரத்திற்குச் சாப்பிடாமல் இருத்தல்.
அவசர அவசரமாக சாப்பிடுவது.
அடிக்கடி கோபம் கொள்ளுதல்
மந்தத்தை ஏற்படுத்தும் பொருட்களை அடிக்கடி உண்பது.

அதிக பட்டினி இருத்தல்
குறைவான தூக்கம் மற்றும் இரவில் நெடுநேரம் கண்விழித்திருப்பது.·
புகைப் பிடித்தல், அளவுக்கதிகமான மதுப்பழக்கம், போதைப் பொருட்களின் பாவனை. ·
·இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தோன்றும் குறிகுணங்கள்:

இந்த வியாதியில் விசேஷமான ஒரு அறிகுறி வயிற்றில் புரளும் ஒரு கட்டி போன்று பின்னல் முடிச்சாகும்.

செரியாமை, வயிற்றில் எரிச்சல், வாந்தி, உடல் வன்மை குறைதல், தேகம் மெலிதல், மனம் குன்றல் ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

·பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, குமட்டல், ஏப்பம், வாயில் நீருறல், வாந்தி, புளியேப்பம்.

வயிறு எந்த நேரமும் அல்லது உணவு உண்ணும் முன் வரை வலித்தல் அல்லது எரிதல்

உண்ட உணவு செரியாமல் இருத்தல்

வயிறு உப்பலாக இருத்தல்.

அடிக்கடி வாந்தி உண்டாகுதல்.
·
புளித்த ஏப்பத்துடன், ஒருவித எரிச்சலுடன் வாயு வெளியேறும்.
·
எதிலும் ஆர்வம் குறைந்து, உடல் சோர்வாகக் காணப்படும்.

வாயுக் கோளாறு அதிகமாகக் காணப்படும்.

இந்த நோயை மேல்நாட்டவர் Dyspepsia (ஜீரண கோளாறு) Chronic gastritis (வயிற்று வேக்காடு) , Gastric ulcer (வயிற்று புண்), Duodenal ulcer (க்ரஹனிப்புண்), Gastric tumor (வயிற்றுக் கட்டி) என பல பெயரிட்டு அழைக்கின்றனர். இதற்கு சரியான மூல காரணத்தை மேல்நாட்டு வைத்திய நூல்களில் கூறப்படவும் இல்லை, கண்டுபிடிக்கப்படவும் இல்லை.

பொதுவாக வயிற்று நீர்ச் சுரப்பு அதிகமாவதாலும், குறைவதாலும் இந்த வியாதி ஏற்படுகிறதென்றும், அவ்விதச் சுரப்பு அதிகமாதல், குறைதல் இவைகளுக்கு நிச்சயமான காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இதற்கான காரணங்கள் பல விளக்கப்பட்டுள்ளன. இந்த நோய்க்கு காரணம் வயிறு மற்ற அவயங்களின் உள்பாகம் வறண்டு போவதேயாகும். வறட்சியினால் உள்புறத்தில் வலியும் கரடுமுரடான முடிச்சுக்களும், புண்களும் உண்டாவது சாதாரணம். இப்படி வறட்சி
ஏற்படுவதற்கு காரணம் வறண்ட உணவுகளை அதாவது நெய், எண்ணெய் கொழுப்புத் திரவங்கள் சம்பந்தப்படாத உணவுகளை அடிக்கடி, அதிகமாக உண்பதும், பசி வேளைகளில் சாப்பிடாமல் பசியை அடக்குவதும், உடம்பில் வறட்சியைக் கொடுக்கக்கூடிய வேலைகளைச் செய்வதும், அப்படிப்பட்ட சீதோஷ்ணங்களில் அதிகமாக பழகுவதும், உடம்பில் குளிர்ச்சி உண்டாவதற்கான பழக்கங்களாகிய எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் போன்ற பழங்கங்களை கடைப் பிடிக்காமல் இருப்பதும், சரீரம் பலவீனமாக இருக்கும்போது வாயுப் பதார்த்தங்களை அதிகமாக உண்பதும் ஆகும். மல மூத்திர வேகங்களை அடக்குவதும், மூலச்சூடும் குன்மத்திற்கு முக்கிய காரணமாகும். ஆதலால் இந்த நோய்க்கு ஆதாரம் வறட்சி, வாய்வு, வாதம், அக்னி பலத்தின் சமமின்மை. இவை நான்கும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை. ஆகையால் இந்த நோய்க்கு சிகிச்சை செய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது உடம்பில் குளிர்ச்சி உண்டாக்கும் உணவு வகைகளை உண்பதும், லகுவான ஆகாரத்தை உண்பதும் மேலும், வாயுவைச் சமன்படுத்தக்கூடிய உணவுகளையும், மருந்துகளையும் உட்கொள்வதே ஆகும்.


மருந்துஉண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்


அதிக காரம், புளிப்பு, எண்ணெய் பலகாரங்கள், மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.

·நெய் உருக்கி, மோர் பெருக்கி அதாவது நெய்யை நன்கு உருக்கியும், மோரில் அதிக நீர் சேர்த்தும் சாப்பிட வேண்டும்.

தினமும் இரவில் பால் அருந்துவது நல்லது.
·
டீ (tea), காஃபி அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.

மனக்கவலை, பரபரப்பு, மன உளைச்சல் இவற்றைக் குறைக்க வேண்டும்.

மணத்தக்காளிக் கீரை, முட்டைகோஸ் இவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது.

மேற்சொன்னவற்றை சரியான முறையில் பின்பற்றினாலே குடற்புண் பாதி குணமாகி விடும்.

கருத்துகள் இல்லை: