நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 29 நவம்பர், 2012

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்...


தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அது உங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கு போவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.
இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.
ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.
இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.
இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.
மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.
ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான். இது எல்லாமே எனக்கு நான் செஞ்சி பார்த்து முழு பலனையும் அனுபவிச்சது எ‌ன்‌கிறா‌ர் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன் (95514 86617).

முருங்கை மரம் ! மருத்துவ பொக்கிஷம் !!

murungai keerai
சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல்நீங்கும்.

முருங்கை காய் சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீராகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். முடி நீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

வைட்டமின்கள் :

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் (Iron)- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன.நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் பாட்டிமார்கள்.

புதன், 14 நவம்பர், 2012

கசகசாவின் மருத்துவக் குணங்கள் !

1.கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
2.ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.
3.10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.
4.வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

மன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்கும் உதவுகிறது!!!

ஜிஞ்சர் டீ என்று அழைக்கப்படும் இஞ்சி தேநீர் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளொன்றுக்கு ஒரு முறை ஜிஞ்ஜர் டீ அருந்தினாலே போதும், நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
இஞ்சியில் ஜிஞ்ஜெரால் என்ற ஒரு சக்தி வாய்ந்த வைட்டமின் உள்ளது. இது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. அதாவது நமக்கு சொல்லொணா கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது.
மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க ஜிஞ்ஜர் டீயில் நன்றாகத் தோய்த்த கர்சீப் அல்லது துணியை வயிற்றின் மீது வைத்துக் கொண்டால் பெரிய அளவுக்கு ரிலீஃப் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

புதன், 7 நவம்பர், 2012

ஆண்கள் எப்போதும் வலிகளை வெளிப்படுத்தமாட்டாங்க...

அனைவருக்குமே பெண்களை விட ஆண்கள் சற்று வலிமையானவர்கள் என்பது தெரியும். ஏனெனில் ஆண்கள் எதையுமே தைரியமாக, மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆனால் பெண்கள், தங்கள் வலிகளை கோபத்தின் வாயிலாகவோ அல்லது அழுதோ வெளிப்படுத்திவிடுவார்கள். அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும் வலிகளை ஒரு போதும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் கஷ்டம் மனதில் இருந்தாலும் ஆண்கள் அழுது வெளிப்படுத்துவது மிகவும் அரிதானது.


முதலில் ஆண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்பது ஏற்கனவே ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைகழகத்தில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வலியை பொறுத்துக் கொள்வார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்படியெனில் ஆண்களுக்கு ஈகோ மிகவும் அதிகம். அதனால் தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் வலிகளை ஏற்றக் கொள்ள முடிகிறது. இதனால் அவர்களது உணர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதோடு, பலமடைகிறது. ஆகவே தான் ஆண்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், மன தைரியத்துடன், மனதை அந்த கஷ்டத்தினால் தளர விடாமல், போராட முடிகிறது. ஆனால் அவர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, அவர்களது நடவடிக்கையை வைத்து அவர்கள் மனதில் வலி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, கணவன் மனைவியை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டால், அதனால் பெண்கள் தங்கள் வலியை அழுது வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால் ஆண்கள் அந்த நேரத்தில் எதுவும் செய்யாமல், பேசாமல் அமைதியாக யாரிடமும் பேசாமல், தனிமையிலேயே இருப்பர். வேண்டுமெனில் சில சமயங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் பேசி, தன் மனதை ஆற்றிக் கொள்வார்கள்.
எப்படியெல்லாம் ஆண்கள் தங்கள் வலியை மறைப்பார்கள்?
* யாரிடமும் எந்த ஒரு உரையாடலையும் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது, ஆண்களிடம் அவர்களுக்கு வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி கேட்டால், அப்போது ஒரு வார்த்தையில் பதிலளிப்பர் அல்லது அந்த டாபிக்கையே மாற்றிவிடுவர். இதை வைத்து அவர்கள் மனதில் வலி இருப்பதை மறைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* சில ஆண்கள் வலியை மறக்க, எப்போதுமே நண்பர்களுடன் இருப்பர். ஏனெனில் தனிமை அவர்களுக்கு பெரும் வலியை ஏற்படுத்தும் என்று எந்த நேரமும் நண்பர்களுடன் இருந்து, வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சிப்பர்.
* ஆண்களின் ஈகோ மிகவும் வலிமையானது. அந்த ஈகோ தான் அவர்களது வலியை தாங்கிக் கொள்ள வைக்கிறது. மேலும் இந்த ஈகோ மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள விடாமல் தடுக்கும். அதிலும் ஆண்கள் தங்கள் வலியை மற்றவர்களுக்கு காண்பித்து, அதனால் மற்றவர்கள் தங்கள் மீது கருணை கொள்வதை விரும்ப மாட்டார்கள்.
* ஆண்களுள் சிலர் தங்களுக்கு இருக்கும் ஈகோவின் அளவை அதிகரிப்பார்கள். இதனால் அவர்கள் எந்த வலியையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.