நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மூல வியாதி {Hemorrhoids}

மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

1.
வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் "வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட" என்ற சூத்திரம் இருக்கிறது.

2.
நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.

3.
உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.

4.
அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.

5.
மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.

6.
வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.

7.
கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.
 
மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:
1.
நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2.
போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3.
நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4.
வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5.
வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6.
பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7.
மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவிகாதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.
இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால்நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும்.
கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான் !

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பிராயலர் கோழி !!!


பிராயலர் கோழி தற்போது கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா?பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…
இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.
இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை.
ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு.


அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது.அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம்.
பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்றி -
டாக்டர்.சி. இரா. தமிழ்வாணன்.

வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது !!

வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது.
ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது. வேர்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாக்கக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாக்காமல் தடுக்கிறது. மேலும் பார்க்கின்ஸன், அல்ஸீமர், போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்கடலை உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப்கொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.
அதனால் நரம்புகள் நன்றாகச் செயல்படுவதால் அது தொடர்புடைய நோய்கள் குறைந்து விடுகிறது. இதில் முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சிறு நீரகக் கோளாறு மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கடலையை தவிர்த்துவிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது. உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும். முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும், வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிகதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் உள்ளது. மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் , நியாஸின் போன்ற வைட்டமின்களும், வேர்க்கடலையில் உள்ளன.
இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும், ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார். எல்லாவிதமான இரத்தப் போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிடவேண்டிய உணவு வேர்க்கடலையாகும்.
பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி முன்பாக ஒரு கைப்பிடி அளவு, வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.வயிற்றுப் போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும், வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது. உடல் அழகும், இதயப் பாதுகாப்பும், வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது. படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள். உணவு ஆய்வாளர்கள், வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நனகு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது. 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இதில் புரதம் அதிகம். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட அவித்தோ, வறுத்தோ, சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் நிறையச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையைச் சாப்பிடும் போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக்கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் .அஃபலோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
நன்றி - டாக்டர்.சி. இரா. தமிழ்வாணன்