நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

சனி, 10 செப்டம்பர், 2011

நரைத்தமுடி அறிவின் அடையாளம்


“நரைத்தமுடி அறிவின் அடையாளம்” என்பதெல்லாம் பொய் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. கறுத்தமுடி நரைத்துப் போவது ஏன் என்பதற்கும் இப்போது விடை காணப்பட்டுள்ளது. நம்முடைய உரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும்போது இவ்வாறு சுரக்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவும் அதிகரிக்கிறது. உரோமத்திற்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கிவிடுகிறது என்கிறார்கள் இந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள். உரோமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்டுவது மெலனின் என்னும் வேதிப்பொருளாகும். உரோமம், கண்கள், தோல் இவற்றின் நிறத்தை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடைசெய்துவிடுவதுதான் பிரச்சினையின் மூலவேர்

புதன், 7 செப்டம்பர், 2011

பொக்கிஷங்கள்

  • 1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
  • 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
  • 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
  • 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
  • 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
  • 6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
  • 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
  • 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
  • 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு....
  • 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
  • 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!
  • 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!
  • 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!
  • 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!
  • 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!
  • 16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!
  • 17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
  • 18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!
  • 19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!
  • 20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!
  • 21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!
  • 22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
  • 23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
  • 24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!
  • 25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!
  • 26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!
  • 27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!
  • 28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
  • 29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
  • 30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!
  • 31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!
  • 32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

கரும்புச்சாறு

தின்ன தின்ன திகட்டாதது கரும்பு. இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட கரும்பு மருத்துவப் பயன் கொண்டது. மித வெப்பமண்டல தாவரமான கரும்பு சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில்தான் உலகத்திலேயே முதன்மையான நாடாக விளங்குகிறது. கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டது.

உடல் இளைக்கும்

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயங்கள். உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்வதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கரும்புச்சாறு பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியவரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்கல் கட்டுப்படும்

கரும்பு சாறு விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம். இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும். கரும்புச் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும்.

கரும்பின் சாற்றைக் காயச்சி செய்யப்படும் சர்க்கரை நாட்டு மருந்துகளுக்குத் பயன்படுத்தப்படுகிறது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைக்கிறது. வெண்மை சர்க்கரையானது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.

சர்க்கரையைக் கொண்டு தயாரிக்கப்படும் கற்கண்டு மிகச்சிறந்த மருந்துவ குணம் கொண்டது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் ஈறுதடிப்பு, இருமல், வாந்தி ஆகியவை தீரும்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் !!!!

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்கவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.

உடம்பில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன. உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்&ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.

ரத்தம் தூய்மையாகும்

ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிப்பதானாலேயே மாரடைப்பு மற்றும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அபாயகரமான நோய்கள் தோன்றாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டு சிரிக்க வேண்டும்.

சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது. மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.

அதிகரிக்கும் நட்பு வட்டம்

சிரிப்பில் பலவகை இருந்தாலும் மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண்டக்கூடியதாகவும் அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்

புன்னகையால் மலரும் மனம்

புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம். சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம்.

மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உவர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள். சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மலர்ந்து மணம் வீசத் தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை

எண்ணெய் மருத்துவம் [ஆயில் புல்லிங் ]

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

திங்கள், 5 செப்டம்பர், 2011

சமைய‌ல் கு‌றி‌ப்பு

உப்பு அதிகமாகிவிட்டதா?
சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம். ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகிவிடும்.

ரவா லட்டு செய்யும்போது....

ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து தயாரித்தால், ரவா லட்டின் சுவை மேலும் கூடும்.

எண்ணெய் காறலை போக்க...

வடை, போண்டா தயாரித்த எண்ணெய் காறலாக இருக்கும். இதை போக்க ஒரு வழி. எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும். இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும்.

தக்காளி சூப் தயாரிக்கும்போது...

வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால், சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும்.

கத்தரிக்காய் வாடாமல் இருக்க...

கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.