நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கத்திரிக்காய் பிரட்டல்



தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 முதல் 6 வரை
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.   ஒரு வாயகன்ற பாத்திரத்தில், கடலை மாவு, மிளகாய்த்தூள், த்னியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது, ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும். அதில் கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, ஓரிரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் விட்டு நன்றாகப் பிசறிக் கொள்ளவும்.   ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு சிவக்க வறுக்கவும்.  பின்னர் அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (கீறிப் போடவும்) போட்டு சற்று வதக்கி விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.  கடைசியில் பிசறி வைத்திருக்கும் கத்திரிக்காயைப் போட்டு கிளறி விடவும்.  மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு காய் வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

சேப்பங்கிழங்கு வறுவல்



தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 5 அல்லது 6
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோளமாவு - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு தேவையான தண்ணீரைச் சேர்த்து, 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை உரித்து விட்டு 1/4" அளவிற்கு வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.  அத்துடன் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசறவும்.  பின்னர் அதில் சோள மாவைத்தூவி பிரட்டி விடவும்.  ஒரு கை தண்ணீரைத் தெளித்து நன்றாகப் பிசறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கிழங்கு துண்டுகளை, எண்ணை கொள்ளுமளவிற்கு தனித்தனியாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  கடைசியில் சிறிது கறிவேப்பிலையையும் எண்ணையில் பொரித்து,  வறுவலின் மேல் தூவி விடவும்.

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

உடலை 'ஸ்லிம்'மாக வைக்கும் சிறந்த 4 உணவுகள்!!!

எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஈஸியான விஷயம் அல்ல. யாருக்கு உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம், ஆனால் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி, உடலில் செரிமானம் குறைந்து, குடலானது சுருங்கிவிடும். ஆகவே ஆரோக்கியமான உடலை, அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும். மேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஒல்லியாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பெர்ரிஸ் : உடல் எடையை குறைக்க பெர்ரிப் பழங்கள் மிகவும் சிறந்தவை. ஏனெனில் அந்த பழத்தில் சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது. இதற்காக ஒரு எலியின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த எலி எவ்வளவு தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டாலும், இந்த பழத்தை சாப்பிட்டதால், அதன் எடை கூடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆன்தோசையனின்கள் தான். ஆகவே எத்தகைய உணவுகளை உண்டாலும், இந்த பெர்ரி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி மற்றும் திராட்சை போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம்.

ஆப்பிள் : ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏனெனில் ஆப்பிளில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும். மேலும் உடலில் இரத்தம் நன்கு ஊறும். அதிலும் ஆப்பிளில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும். இதற்கு எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் ஒரு நம்பிக்கை தான். வேண்டுமென்றால் நீங்களும் சாப்பிட்டுப்பாருங்கள், நீங்களே வயிறு நிறைந்தது போல் உணர்வீர்கள். ஆனால் இதில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் போன்றவை குறைவாக இருப்பது, போதாதா என்ன?

தக்காளி : சமையலில் பயன்படுத்தும் தக்காளி, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, உடலை சுத்தம் செய்கிறது. அதிலும் தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் இருக்கிறது. ஆகவே உடல் ஸ்லிம்மாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். ஆனால் இந்த தக்காளியை சமையலில் சேர்த்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. ஏனெனில் சமைத்து சாப்பிட்டால், தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.
சாக்லேட் : சாக்லேட் என்று சொன்னதுமே அனைவருக்குமே ஒரு ஆசை ஏற்படும். அத்தகைய சாக்லேட்டில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, சருமமும் மென்மையாக மின்னும். நிறைய ஆராய்ச்சியில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, உடலை பிட்டாகவும் வைக்கும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட் இதய நோயைத் தடுப்பதோடு, பசியையும் கட்டுப்படுத்தும். வேண்டுமென்றால் பசி ஏற்படும் போது சிறிது டார்க் சாக்லேட் சாப்பிட்டுப் பாருங்கள், சுவையாக இருப்பதோடு, பசி கட்டுப்பட்டு, உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

ஆகவே இத்தகைய உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாகாமல், உடலும் பிட்டாக, சருமமும் மென்மையாக அழகாக இருக்கும்.



மருந்தாகும் மகரந்தத் தூள் !!!

தேன் சேகரிக்கும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்ததுகள்களில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மகரந்த துகள்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று இங்கிலாந்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.




தேனீக்கள் பல பூக்களிலும் அமர்ந்து தேன் சேகரிக்கின்றன. அப்போது, அவற்றின் கால்களில் பூவின் மகரந்த தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன.அடுத்த பூவில் உட்காரும்போது, தூள்கள் அந்த மலரில் விழுகின்றன. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்த துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த மகரந்ததாளில் புரதம், கார்போஹைட்ரேட், பி-காம்ளக்ஸ் வைட்டமின், தாது உப்பு, தேவையான கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. மகரந்த துகள்களில் உள்ள சத்துக்கள் உடலின் சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.



உடம்பில் உள்ள நல்ல செல்கள் அழிந்து தீய செல்கள் அதிகரிப்பதுதான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. தீங்கு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களால் நமது செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஃப்ரீ ரேடிகல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் தடுப்பது ஆன்டி ஆக்சிடன்ட்கள். மலர்களின் மகரந்த துகள்களில் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன.



தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து தற்போது லண்டனில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மகரந்த துகள்களை காய்கறி அல்லத சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம்.அலர்ஜி இருப்பவர்கள் தவிர்த்துவிடவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் அத்திப்பழம்!

அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.




அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.



அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலேனோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.



இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.



இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

வியாழன், 26 ஜூலை, 2012

இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறிவரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கிவிடுகிறது. சமச்சீரற்ற உணவுமுறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கு என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.
இன்றைக்கு 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களும்தான். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு யாரும் இதனை பின்பற்றுவதில்லை.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.
தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வரை கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும். முடி உதிர்வது கட்டுப்படும்.
உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
2
ஸ்பூன் ஹென்னா பவுடர், 1 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் வெந்தையப் பொடி, 3 ஸ்பூன் காபி, 2 ஸ்பூன் துளசி இலை சாறு, 3 ஸ்பூன் புதினா இலைச் சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கவும். அதை தலையில் அப்ளை செய்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலசவும். இதனால் இளநரை படிப்படியாக நிறம் மாறும். தலையும் குளிர்ச்சியடையும்.ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கப் ப்ளாக் டீ கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். ஒரு மணிநேரம் ஊறவைத்து பின்னர் தலைக்கு குளிக்கவும். இதனால் இளநரை மாறி தலைமுடி படிப்படியாக கருமையாகும்.
இளநரையை போக்குவதில் வெங்காயம் சிறந்த மருந்தாகும். இது உதிர்ந்த இடங்களில் கூந்தலை நன்கு வளரச்செய்யும். ஒரு கிராம் கருப்பு மிளகு அரைக் கப் தயிர், சிறிதளவு லெமன் சாறு கலந்து தலைக்கு அப்ளை செய்யவும். இது இளநரையை மறையச்செய்யும்.
நெல்லிக்காய் பேஸ்ட், நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு பூசி வர இளநரை மறைவதோடு கூந்தல் திக்காக வளரும். மருதாணி இலையை நன்கு காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு பூசிவர கூந்தல் கருமையாகும்.
எலுமிச்சையானது கூந்தலை இயற்கை நிறத்திற்கு மாற்றும் சக்தி படைத்தது. எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் ஊறவைத்து பின்னர் நன்கு அலசினால் கூந்தல் படிப்படியாக கருமையாகும். நெல்லிக்காய் சாறு, பாதம் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் நன்றாக கலந்து தலைக்கு பூசி ஊறவைத்து குளிக்க கூந்தல் கருமையாவதோடு பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.

காரசார மிளகாய் கொழுப்பை கரைக்கும்!

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலுக்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரசாரமாய் உணவில் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிடுபவர்கள் உடல் எடையைப் பற்றி இனி கவலைப்படத்தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய சமையலில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் பொருட்களை சேர்க்கின்றனர். சீரகம், வெந்தையம், மிளகு, பூண்டு, மிளகாய் என பல பொருட்களை கலந்துதான் சமையல் செய்யப்படுகிறது. இனிப்பு, காரம், புளிப்பு என அறுசுவைகளையும் சமையலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பல பொருட்களை சமையலில் பயன்படுத்திவருகின்றனர் முன்னோர்கள்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமான நன்மைகளை ஏற்படுத்துகின்றன. காரத்திற்காக பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றல் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து சிக் என்று ஆக்கிவிடுகிறதாம்.
லண்டனைச் சேர்ந்த உணவு விஞ்ஞானி ஸ்டீபன் ஒயிட்டிஸ் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மிளகாய் வத்தலில் கேப்சைசின் என்ற ரசாயன படிமம் உள்ளது. அது கடினமான வெப்பத்தை தரக்கூடியது. அதனால் கொழுப்பை உருவாக்கும் செல்கள் எரிக்கப்படுகின்றன.
இதனால் வயிற்றுப் பகுதியில் படிந்திருக்கும் கொழுப்பு படிவங்கள் அழிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவில் அதிக அளவில் மிளகாய் வத்தல் அதாவது காரம் சேர்த்து கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவை வராமல் தடுக்க கொழுப்பு செல்களை அழிக்கவும் மிளகாய் வத்தலை அதிகம் பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். ஆண்களும் பெண்களுமாய் 34 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 28 நாட்கள் நடைபெற்ற ஆய்வின் முடிவில் மிளகாய் வற்றலுக்கு உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

தோட்டத்தில் இருக்கும் களைச்செடிகளை அகற்ற வேண்டுமா?

வீட்டில் ஆசையாக வளர்க்கும் தோட்டத்தில் பாம்புகள், எலிகள் மற்றும் சிலந்திகள் வந்து தங்கிவிடுகின்றன. மேலும் களைச்செடிகளும் முளைத்து புதர் போல் மாறிவிடுகிறது. அவ்வாறு இருப்பதால் தோட்டத்திற்குள்ளே நுழைவதற்கே பயமாக இருக்கும். அத்தகைய பூச்சிகளை, விலங்குகளை தோட்டத்தில் இருந்து அகற்ற, கடைகளில் விற்கும் பூச்சிக்கொல்லிகளை வாங்கி தெளித்தால், அவைகள் இறந்துவிடுவதோடு, வராமலும் இருக்கும். ஆனால் களைச்செடிகளை மட்டும் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கும். அதற்கும் சில எளிமையான வழிகள் இருக்கின்றன.
களைச்செடிகளை அகற்ற ஈஸியான டிப்ஸ்...
* முதலில் ப்ளீச்சிங் பவுடரை மேலே தூவுவதை தவிர்க்க வேண்டும். இதனால் செடிகள் தான் கருகிவிடும். ஆகவே அதற்கு பதிலாக அந்த ப்ளீச்சிங் பவுடரை நீரில் கரைத்து நிலத்தில் தெளிக்க வேண்டும். இதனால் தோட்டத்தில் இருக்கும் களைகள் அழிவதோடு, பூச்சித் தொல்லைகளும் இல்லாமல் இருக்கும்.
* பேக்கிங் சோடா ஒரு சிறந்த களைச்செடிகளை அழிக்க உதவும் பொருள். அதற்கு சிறிது பேக்கிங் சோடாவை கையில் எடுத்துக் கொண்டு, செடிகளைச்சுற்றி தூவ வேண்டும். இதனால் களைகள் வராமல் தடுக்கலாம்.
* எப்போதும் தோட்டத்திற்கு உரங்களை போட வேண்டும். இதனால் களைகள் வளராமல் இருப்பதோடு, தோட்டத்தில் வளர்க்கும் செடிகளும் நன்கு ஆரோக்கியமாக வளரும். முக்கியமாக அதிக அளவு உரங்களையும் தோட்டத்திற்கு போடக் கூடாது. இது வளரும் செடிகளை அழித்துவிடும்.
* செடிகள் இருக்கும் இடத்தில் தண்ணீர் வற்றியதும், நீரை ஊற்றிக்கொண்டே இருக்க கூடாது. அவ்வாறு ஊற்றினால் களைகள் நன்கு வளரும். ஆகவே அதிகமான அளவு தண்ணீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டாம்.
* தோட்டத்தில் நடக்கும் பாதைகளில் இருக்கும் களைகளை அகற்றுவது என்பது மிகவும் கடினமானது. ஆகவே அப்போது உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து, நடைபாதைகளில் ஊற்றினால் களைகளது வளர்ச்சியானது தடைபடும்.
* உப்புக்களை தோட்டத்தில் இருக்கும், செடிகளை சுற்றி வைத்திருக்கும் செங்கற்களைச் சுற்றி தூவ வேண்டும். இதனால் தேவையற்ற களை மற்றும் புற்கள் வளராமல் இருக்கும்.
* ஒரு அவுன்ஸ் வோட்கா, சிறிது வினிகர் மற்றும் 3-4 துளி சோப்புத் தண்ணீரை, நீரில் கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, களை உள்ள இடத்தில் தெளிக்க வேண்டும். இதனால் களைகள் வராமல் இருக்கும்.

அழகான சருமத்தை தரும் வாழை இலை!!!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட. இப்போது அந்த வாழை இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
வாழை இலையின் நன்மைகள்...
* அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
* வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.
* அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.
* குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.
* மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

நீங்க காரசாரமான உணவு சாப்பிடுறவங்களா ?


இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் காரசாரமான உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் உணவில் நல்ல சுவை மற்றும் மணம் வருவதற்கும் பல பொருட்களை சேர்க்கின்றனர். ஆனால் அப்படி காரமான உணவுகளை, சுவைக்காக அதிக மணமூட்டும் பொருட்களை சேர்ககும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவரும் அறிவதில்லை. இவற்றையெல்லாம் உண்பதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் அதிகமான காரசார உணவுகளை உண்பதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள் மற்றம் கனிம சத்துக்கள் சரியாக செரிமானம் ஆகாமல், மேலும் செரிமான மண்டலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும். அதற்காக காரமான உணவுகளை உண்ண கூடாது என்று கூறவில்லை, குறைவான அளவு உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை நேரிடக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
வயிற்று வலி : காரமான உணவில் அதிக அளவு அமிலத்தன்மையானது இருக்கும். அதனால் கடுமையான வயிற்று வலியானது ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் காரமான உணவில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் வால்களை பாதிக்கும். ஏனெனில் மிளகாயில் கேப்சைசின் என்னம் பொருள் இருப்பதால், குடலில் பாதிப்பை எற்படுத்தி வலியை உண்டாக்கும். மேலும் அதிக அளவு காரத்தை சாப்பிட்டால் கேப்சைசின், வயிற்றில் எரிச்சல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
இரைப்பை புண் : உணவில் காரம் அதிகமான அளவு பச்சை மிளகாயை பயன்படுத்தினால், இரைப்பையில் புண் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் டியோடினத்திலும் புண்ணானது ஏற்படும். மேலும் காரத்திற்காக சேர்க்கப்படும் ஒரு சில மசாலாக்கள் உணவுக் குழாயிலும் புண்கள் ஏற்பட வழிவகுக்கும். ஆகவே இரைப்பையில் புண் இருந்தால், வயிறு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும். இவ்வாறெல்லாம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த காரம் வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் இருந்தால் ஒரு துளி கூட காரத்தை உணவில் சேர்க்க கூடாது.
இரைப்பை அழற்சி : சில சமயங்களில் காரமான உணவுகளால் வயிற்றில் அதிக எரிச்சலால் இரைப்பையில் அழற்சி கூட எற்படும். அந்த அழற்சி இருந்தால் அஜீரணம், வயிற்று வலி, விக்கல்கள் கூட இருண்ட மலம் போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உட்னே மருத்துவரை அணுகுவதோடு, காரமான உணவுகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதிலும் சில நேரங்களில் லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படும்.
ஆகவே காரமான உணவுகளை அதிகமாக உண்ணாமல், உண்ண வேண்டிய அளவு மட்டும் உண்டு உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்