நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 10 அக்டோபர், 2012

தக்காளி தொக்கு



தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4
புளி - ஒரு நெல்லிக்காயளவு
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
நல்லெண்ணை - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தக்காளியை வெளியே எடுத்து ஆற விடவும்.  பின்னர் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள புளியை (ஊற வைத்துள்ள நீரோடு சேர்க்கலாம்) சேர்த்து, விழுதாக அரைத்தெடுக்கவும்.

இஞ்சியையும் விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு பொன்னிறமாக் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூளை சேர்க்கவும். இஞ்சி விழுதையும் சேர்த்து வதக்கவும்.  பின்னர் தக்காளி விழுதைப் போட்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். வெல்லத்தூளைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தொக்கு கெட்டியாகி எண்ணை பிரிந்து வரும் வரை அடிக்கடி கிளறி விடவும். கடைசியில் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி இறக்கி வைக்கவும்.

சுத்தமான மூடி போட்ட ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

இதை தயிர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.  சூடான சாதத்தில் சிறிது தொக்கைப் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

மஞ்சளின் நற்குணங்கள்!

'ஏழைகளின் குங்குமப்பூ' - மஞ்சளின் நற்குணங்கள்!
மஞ்சளை ‘ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும்

மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.
அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள். இதன் அறிவியல் பெயர், ‘கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள ‘கர்க்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
மஞ்சளின் மருத்துவக் குணங்கள்:
·    ‘கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்துகுடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது.
·    காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.
·    மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.
·    மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.
·    வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும் போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.
·    வீக்கத்தைக் குறைக்கும். காயங்களை ஆற்றும்.
·    புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
·    அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும்.
·    மஞ்சள் தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப் புண் ஆறும். சளிப் பிரச்னையும் சரியாகும்.
·    பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.
·    குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி – கடுப்பு ஏற்படும். மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்; வலி குறையும்.
·    தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.
·    சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.
·    சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.
·    மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவில் அரைத்துப் பருக்களின் மீது தடவிவந்தால், சில நாட்களிலேயே பருக்கள் மறைந்துவிடும்.
·    அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.
·    மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருள். சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை யூஸ் பண்ணுங்க...

நெல்லிக்காய் எண்ணெய் (amla oil)- கூந்தல் உதிர்தல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் எண்ணெய் சரியானதாக இருக்கும். ஏனெனில் இந்த எண்ணெயில் கூந்தல் நன்கு உறுதியாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த எண்ணெயில் நெல்லிக்காய் தான் முக்கியமான பொருள். இந்த பொருள் கூந்தலை எண்ணெய் பசையுடனும், கூந்தலை நன்கு வளர்ச்சியடையவும் செய்யும். ஆகவே இந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து பின்னர் தூங்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.


* தேங்காய் எண்ணெய் - அனைவருக்கும் நன்கு தெரிந்த எண்ணெய் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் தான் கூந்தல் உறுதிக்கும், முடியின் வேர்கள் வலுவடைவதற்கும் சிறந்தது என்று நம் முன்னோர்கள் எல்லாம் சொல்வார்கள். அதேப்போன்றும் இந்த எண்ணெயும் உண்மையில் சிறந்தது தான். ஆகவே தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தடவி, மசாஜ் செய்து குளித்து வர வேண்டும். வேண்டுமென்றால், தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால், பொடுகு போய்விடும்.

* கடுகு எண்ணெய் - கூந்தல் உதிர்தலுக்கு கடுகு எண்ணெயுடன், மருதாணியை சேர்த்து, தேய்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படாமல் தடுக்கலாம். அது எப்படியென்றால், முதலில் கடுகு எண்ணெயுடன், சிறிது மருதாணி இலைகளை போட்டு, காய வைத்து, பின் அதில் உள்ள இலைகளை நீக்கி, ஸ்கால்ப் மற்றும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கடுகு எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3, கூந்தல் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
* ஆமணக்கெண்ணெய் - கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கெண்ணெய் தான். இந்த எண்ணெயை ஸ்கால்பிற்கு மட்டும் தடவ வேண்டும். கூந்தல் முழுவதும் தடவினால், பின் அந்த எண்ணெய் பசையை நீக்குவது என்பது கடினமாகிவிடும். ஆகவே இந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது தலைக்கு தடவி, தலைக்கு துணியைச் சுற்றி, பின் காலையில் எழுந்து குளித்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், இதன் பலனை சில வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.

* மீன் எண்ணெய் - உண்மையில் மீன் எண்ணெய் கூந்தல் உதிர்வதை நிறுத்தி, முடி வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகிறது. என்ன மீன் எண்ணெய் என்று சொன்னதும் எப்படி அதைப் போய் தேய்ப்பது என்று யோசிப்பீர்களே! மீன் எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் நாற்றத்தை தாங்க முடியாது தான். ஆகவே அதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாம். இதனால் கூந்தல் உதிராமல், ஆரோக்கியமாக வளரும்.
ஆகவே மேற்கூறியவற்றில், ஏதேனும் ஒன்றை செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, அடர்த்தியாக வளரும்.

குழந்தைக்கு விக்கல் எடுக்குதா?

விக்கல் என்ற விசயம் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அதுவும் குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் ஏதாவது தூசியையோ, சிறு நூலினையோ தலையை சுற்றி உச்சஞ்தலையில் வைப்பார்கள். அதெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறும் நிபுணர்கள் விக்கல் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை நீக்குவதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர்.




நாம் சுவாசிக்கும் போது மார்புத்தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்பைகளை ஒட்டி உள்ள உதரவிதானமும் விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. இப்போது மார்புக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் மார்புக்குள் காற்று எளிதில் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி சுவாசப்பைகளுக்குள் நுழைந்துவிடுகிறது. இது இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.சில நேரங்களில் குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று தொண்டையில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக சுவாசப்பைகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது தொண்டையில் ‘விக்..' என்று ஒரு வினோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.



ரிலாக்ஸ் செய்யுங்கள்



விக்கலால் அவதிப்படும் குழந்தையை ரிலாக்ஸ் ஆக தட்டிக்கொடுக்கலாம். பசியினால் சில குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம். திடீர் விக்கல்களை நிறுத்த சிறிதளவு தண்ணீர் கொடுக்கலாம். இது விக்கலை நிறுத்த உதவும்.



பால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும். இல்லை எனில் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சின்னக்குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும் அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம். அரோமா தெரபியின் மூலம் விக்கலை நிறுத்தலாம். சிறிதளவு எண்ணெயை எடுத்து டிஸ்யூ காகித்த்தில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.



பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்கு மாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.



மனநோய் விக்கல்



சிலருக்கு மனநோய் காரணமாகவும் விக்கல் வரும். இதற்கு ‘ஹிஸ்டிரிக்கல் விக்கல்' என்று பெயர். பொதுவாக பள்ளிக்கு அல்லது தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்கு இந்த வகை விக்கல் வரும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த விக்கல் உள்ள குழந்தைகள் தூங்கினால் விக்கல் நின்று விடும். கண் விழித்ததும் விக்கல் தொடங்கிவிடும். இவையெல்லாம் சாதாரண காரணங்கள். இதனால் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.



அடிப்படை நோய் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு விக்கல் உண்டானால், அதை நிறுத்துவது எளிது. அவருடைய ரத்தத்தில் கரியமிலவாயுவின் அளவை அதிகரித்தால் விக்கல் நின்றுவிடும்.



சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்' கொடுத்தால் விக்கல் நிற்கும்.விக்கல் எடுப்பது இயல்பானது, சாதாரணமானதுதான். அதை நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம். என்கின்றனர் நிபுணர்கள்.



அதிக விக்கல் ஆபத்து



ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் அதாவது 48 மணிநேரத்திற்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். எனவே அதிக விக்கலை நிறுத்த மருத்துவரை அணுகவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

எள்


         
                                                        எள்

மருத்துவக் குணங்கள்:
  1. கறுப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.
  2. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
  3. எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்.
  4. இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.
  5. இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
  6. இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.
  7. எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.
  8. சருமத்தில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் சரும நோய்கள் அகலும்.
  9. நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் சரும நோய்கள் அணுகாது.
  10. கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, லேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை  விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.
  11. வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.
  12. எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
  13. உடற்சூடு தலைப்பாரம் குறையும்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கத்திரிக்காய் பிரட்டல்



தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 முதல் 6 வரை
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.   ஒரு வாயகன்ற பாத்திரத்தில், கடலை மாவு, மிளகாய்த்தூள், த்னியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது, ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும். அதில் கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, ஓரிரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் விட்டு நன்றாகப் பிசறிக் கொள்ளவும்.   ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு சிவக்க வறுக்கவும்.  பின்னர் அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (கீறிப் போடவும்) போட்டு சற்று வதக்கி விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.  கடைசியில் பிசறி வைத்திருக்கும் கத்திரிக்காயைப் போட்டு கிளறி விடவும்.  மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு காய் வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

சேப்பங்கிழங்கு வறுவல்



தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 5 அல்லது 6
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோளமாவு - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு தேவையான தண்ணீரைச் சேர்த்து, 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை உரித்து விட்டு 1/4" அளவிற்கு வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.  அத்துடன் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசறவும்.  பின்னர் அதில் சோள மாவைத்தூவி பிரட்டி விடவும்.  ஒரு கை தண்ணீரைத் தெளித்து நன்றாகப் பிசறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கிழங்கு துண்டுகளை, எண்ணை கொள்ளுமளவிற்கு தனித்தனியாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  கடைசியில் சிறிது கறிவேப்பிலையையும் எண்ணையில் பொரித்து,  வறுவலின் மேல் தூவி விடவும்.

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

உடலை 'ஸ்லிம்'மாக வைக்கும் சிறந்த 4 உணவுகள்!!!

எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஈஸியான விஷயம் அல்ல. யாருக்கு உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம், ஆனால் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி, உடலில் செரிமானம் குறைந்து, குடலானது சுருங்கிவிடும். ஆகவே ஆரோக்கியமான உடலை, அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும். மேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஒல்லியாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பெர்ரிஸ் : உடல் எடையை குறைக்க பெர்ரிப் பழங்கள் மிகவும் சிறந்தவை. ஏனெனில் அந்த பழத்தில் சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது. இதற்காக ஒரு எலியின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த எலி எவ்வளவு தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டாலும், இந்த பழத்தை சாப்பிட்டதால், அதன் எடை கூடவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆன்தோசையனின்கள் தான். ஆகவே எத்தகைய உணவுகளை உண்டாலும், இந்த பெர்ரி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி மற்றும் திராட்சை போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம்.

ஆப்பிள் : ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏனெனில் ஆப்பிளில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும். மேலும் உடலில் இரத்தம் நன்கு ஊறும். அதிலும் ஆப்பிளில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும். இதற்கு எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் ஒரு நம்பிக்கை தான். வேண்டுமென்றால் நீங்களும் சாப்பிட்டுப்பாருங்கள், நீங்களே வயிறு நிறைந்தது போல் உணர்வீர்கள். ஆனால் இதில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் போன்றவை குறைவாக இருப்பது, போதாதா என்ன?

தக்காளி : சமையலில் பயன்படுத்தும் தக்காளி, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, உடலை சுத்தம் செய்கிறது. அதிலும் தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் இருக்கிறது. ஆகவே உடல் ஸ்லிம்மாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். ஆனால் இந்த தக்காளியை சமையலில் சேர்த்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. ஏனெனில் சமைத்து சாப்பிட்டால், தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.
சாக்லேட் : சாக்லேட் என்று சொன்னதுமே அனைவருக்குமே ஒரு ஆசை ஏற்படும். அத்தகைய சாக்லேட்டில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, சருமமும் மென்மையாக மின்னும். நிறைய ஆராய்ச்சியில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, உடலை பிட்டாகவும் வைக்கும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட் இதய நோயைத் தடுப்பதோடு, பசியையும் கட்டுப்படுத்தும். வேண்டுமென்றால் பசி ஏற்படும் போது சிறிது டார்க் சாக்லேட் சாப்பிட்டுப் பாருங்கள், சுவையாக இருப்பதோடு, பசி கட்டுப்பட்டு, உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

ஆகவே இத்தகைய உணவுகளையெல்லாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாகாமல், உடலும் பிட்டாக, சருமமும் மென்மையாக அழகாக இருக்கும்.



மருந்தாகும் மகரந்தத் தூள் !!!

தேன் சேகரிக்கும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்ததுகள்களில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மகரந்த துகள்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று இங்கிலாந்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.




தேனீக்கள் பல பூக்களிலும் அமர்ந்து தேன் சேகரிக்கின்றன. அப்போது, அவற்றின் கால்களில் பூவின் மகரந்த தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன.அடுத்த பூவில் உட்காரும்போது, தூள்கள் அந்த மலரில் விழுகின்றன. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்த துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த மகரந்ததாளில் புரதம், கார்போஹைட்ரேட், பி-காம்ளக்ஸ் வைட்டமின், தாது உப்பு, தேவையான கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. மகரந்த துகள்களில் உள்ள சத்துக்கள் உடலின் சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.



உடம்பில் உள்ள நல்ல செல்கள் அழிந்து தீய செல்கள் அதிகரிப்பதுதான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. தீங்கு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களால் நமது செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஃப்ரீ ரேடிகல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் தடுப்பது ஆன்டி ஆக்சிடன்ட்கள். மலர்களின் மகரந்த துகள்களில் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன.



தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து தற்போது லண்டனில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மகரந்த துகள்களை காய்கறி அல்லத சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம்.அலர்ஜி இருப்பவர்கள் தவிர்த்துவிடவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் அத்திப்பழம்!

அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.




அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.



அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலேனோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.



இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.



இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.