நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மறந்து போன மருத்துவ உணவுகள் -- சமையல் குறிப்புகள்

 

''உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின் நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே...'' என வரவேற்கிறார் சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா. இவர் வழங்கும் இந்த ரெசிபிகள் சுவையானவை... சத்தானவை!

பிரண்டைச் சத்துமாவு
தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் - அரை கிலோ, புளித்த மோர் - ஒரு லிட்டர், கோதுமை - ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து - தலா 100 கிராம்.

செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.

மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.


அஷ்ட வர்க்க உணவுப்பொடி
தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் - தலா 50 கிராம்.

 

செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!

மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.


இஞ்சிப் பச்சடி
தேவையானவை: இஞ்சி - 100 கிராம், புளி - சிறிதளவு, எலுமிச்சை - 4, பெரிய வெங்காயம் - 2, உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.





எள்ளு சாதம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - 450 கிராம், எள், நெய் - தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு - தலா 15 கிராம், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் - அரை மூடி, கறிவேப்பிலை - ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!

மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.


வேப்பங்கொழுந்து துவையல்
தேவையானவை: வேப்பங்கொழுந்து - 30 இணுக்கு, வெல்லம் - 10 கிராம், உளுத்தம்பருப்பு - 20 கிராம், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.

 

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 

முடி கொட்டுகிறதா? கருமை நிறம் வேண்டுமா?; கவலையை விடுங்க....!

கரும்பச்சை இலைகளையுடைய சிறு செடியினம், நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். எல்லா பாசனங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையது.
 

வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

குணமாகும் நோய்கள் - வலிப்பு, நரம்பு நேய்கள், புண்கள், மூலம், காமாலை, நீர்சுருக்கு நீக்கும்.

இயற்கை சாயம்:

டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரி இலைகளைப் பயன்படுத்தினால், எந்த கலவையும் இல்லாமல் கருகரு முடியை பெறலாம்.
 

 


 
அவுரி ஆயில் செய்ய:

அவுரி இலை - 50 கிராம்

மருதாணி இலை - 50 கிராம்

வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்

கறிவேப்பிலை - 50 கிராம்

பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் அரைத்து, வைத்திருக்கும் அவிரி கலவையுடன் சேர்த்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதிநிலைக்கு வரும்போது இரக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்து தினசரி தலைக்கு என்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் மிடுயின் நிரம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன.



மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.

உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

1. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

2. நீரிழிவுக்கு உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.

3. முட்டைக்கோஸ்,கலோரிகள் குறைவாக மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுபடுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும்  ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளது.

4. சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.

5. சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

சித்த மருத்துவ முறை வைத்திய குறிப்புகள்

1. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

2. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

3. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

4. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

5. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

6. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

7. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
8.தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

உலர் திராட்சை மருத்துவ பயன்கள்

உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.

பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும். உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன.

இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்

சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் என்றால் பலருக்கும் பிடிக்கும் அதனை வித்தியாசமாக சமைத்து மணமணக்க சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு இந்த தேங்காய்ப்பால் மீன் குழம்பு நிச்சயம் பிடிக்கும். இதனை செய்வது எப்படி இதற்கு தேவையான பொருட்கள் என்ன என பார்ப்போம்.
 


தேவையான பொருட்கள்:

அரை கிலோ மீன், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று தக்காளி, தேங்காய்ப்பால் இரண்டு கப், 4 தேக்கரண்டி மீன் குழம்பு மசாலா, 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் வெந்தயம், பச்சை மிளகாய் நான்கு, ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது, இரண்டு கப் புளி தண்ணீர், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அளவு வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறுது நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து அதனுடன் வதக்கவும். தக்காளி வதங்கி பின்னர் பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மீன் குழம்பு மசாலா சேர்க்க வேண்டும். அதனுடன் புளித்தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் அதனுடன் மீன் சேர்த்து பாதியளவு வேக விட்ட பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளிந்து மேலே வந்த உடன் இறக்கவும். தற்போது சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு தயார்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய...

தேவையான பொருட்கள்:
தக்காளி - 100 கிராம்

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 50 மில்லி

கடுகு - 50 மில்லி + ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

புளி - ஒரு எலுமிச்சை அளவு

எண்ணெய் - 25 மில்லி
 
செய்முறை:
தக்காளியுடன் புளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளிக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
ஒட்டாமல் திரண்டு வரும் போது கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆந்திரா தக்காளித் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்

ஆரோக்கியம் கொண்ட உளுத்தம் மாவு புட்டு...!

தேவையானவை:

தோல் உள்ள உளுந்து - 200 கிராம்

புழுங்கல் அரிசி - 100 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

ஏலக்காய் - சிறுதளவு

உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தையும், அரிசியையும் தனித்தனியே நன்றாக சுத்தம் செய்து அரைத்த மாவை ஒன்றாக கலந்து, இதில் தேவையான அளவு உப்பு போட்டு, சிறுது தண்ணீர் தெளித்து கெட்டியாக சற்றே கரகரப்பான பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதாவது புட்டு மாதிரி பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

புட்டு மாதிரி உதிரியாக வேக வைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும். புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்து கிளறவும். சூடாக சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமள், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.

பலன்கள்:

உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண்களுக்கு கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும் ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

குறிப்பு:

உளுந்தை சற்று லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். நல்ல வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு!!

நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை கொண்டு நமது முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது. வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்

உலர்ந்த சிகைக்காய்

உலர்ந்த நெல்லிக்காய்

ரீத்தா (பூந்தி கொட்டை)

தண்ணீர்

ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை:

வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த நெல்லிக்காய் - 1/2 கப்

உலர்ந்த சிகைக்காய் - 1/2 கப்

பூந்தி கொட்டை - 10

தண்ணீர் - 1.5 லிட்டர்


 

 
செய்முறை:

முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.

இது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நிரந்தரமாக அக்குளில் உள்ள முடியை நீக்குவது எப்படி தெரியுமா ?



பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள்.

இப்படி ஷேவிங் செய்வதால், பலருக்கு அக்குளில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்றவை ஏற்படும். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம்.

அக்குளில் உள்ள முடியை இயற்கை வழியில் நீக்க உதவும் அந்த இரண்டு சமையலறைப் பொருட்கள் தான் எலுமிச்சை மற்றும் சர்க்கரை.

2
டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், அக்குளில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில் முடி வளர்வதே நின்றுவிடும்.

வேண்டுமானால் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இந்த முறையின் மூலமும் அக்குள் முடியை நிரந்தரமாக தடுக்கலாம்.

எலுமிச்சையை சருமத்திற்குப் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள். இதனால் எலுமிச்சையால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

முக்கியமாக இந்த முறையை அக்குளில் மட்டுமின்றி, கை, கால்களில் வளரும் முடியை நீக்கவும் பயன்படுத்தலாம்...