நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 13 நவம்பர், 2018

பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை அறியும் வழிமுறைகள்...

பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால், இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து  கொள்ளலாம்.

வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்கும். ஆனால் மாவு  கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடும்.

பாலில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதை கண்டறிய ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால்  நுரை வரும். வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும். ஆனால், சோப்புத் தூள் கலந்த  பாலாக இருப்பின் அந்த நுரை போகாது.

சுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால்,  கலப்பட பால் திரியாது. 

பாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாம். ஒரு சிறிய டம்ளரில்  பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காகிதம் பச்சை நிறமாக மாறினால் அது நல்ல பால். அதுவே, மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் என்பதை உறுதி செய்யலாம்.

சனி, 10 நவம்பர், 2018

சத்துக்கள் மிக்க சுவையான எள்ளு உருண்டை செய்ய...!

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் - 4 கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் - 6
நெய் - சிறிதளவு
செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து  மிக்ஸியில் போட்டு அரைக்கவும். (நைசாக அரைக்காமல் சிறிது மொற மொறப்பாக அரைக்கவும்).

அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரையை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.

குறிப்பு: சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம். பாகு செய்யும் முன் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பாகு செய்யலாம். இதனால் வெல்லத்தில் இருக்கும் கல் நீக்கப்படுகிறது. மேலும் எள்ளுவை பொடிக்காமலும் சேர்த்து உருண்டை செய்யலாம்.

எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும், எள் உருண்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் போக்க முடியும்.

இயற்கையான முறையில் பாதவெடிப்பை சரிசெய்வதற்கான குறிப்புகள்...

பாதவெடிப்பு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை கொள்ளவேண்டிய விஷயம். என்ன  செய்தாலும் திரும்ப வருகிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்யலாம்.
தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன்  மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து பேஸ்ட் தயாரித்து தடவினால், பாதங்கள் வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கும். 

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5  நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து  கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும். மேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணெய்யை தேய்க்க, இவை பாதங்களை மென்மையாக்கும்.

வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள்  மறையும்

வியாழன், 27 செப்டம்பர், 2018

குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகிவிடலாம்? இது உண்மைதானா?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது.

குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கணையத்தை பாதுகாக்கும் உணவுப் பொருட்கள்...!

மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் சத்து, புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. தினமும் உணவில் சிறிதளவு மஞ்சத்தூளைச் சேர்ப்பதால், நாம் புற்றுநோய்ப் பிடியிலிருந்து தப்பிக்கலாம். மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

காளானிலுள்ள நார் சத்து, செலினியம், பொட்டாஷியம், வைட்டமின் டி2, குறைந்த கலோரி சத்து இவை கணைய பாதுகாப்பிற்கு ஏற்றவை.

காலை நேரத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி முதலிய பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது, கணையத்தைப் பலப்படுத்தும். குறிப்பாக ஆரஞ்சு, மஞ்சள்,  இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள காய்கறி வகைகளில் பீட்டா கரோட்டின் சத்து அதிகமாகவே இருக்கும். இந்த வகைச் சத்துகள் கொண்ட காய்கறிகள்  புற்றுநோயில் இருந்து கணையத்தைப் பாதுகாக்கும்.

தயிர் கணையத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கணையத்தை வலிமைப்படுத்தும். புரோபயாடிக் எனும் நல்ல  நுண்ணுயிரிகளைக் கொண்ட தயிர், செரிமானத்துக்கு உதவும். கணையத்தின் மிக முக்கிய வேலை செரிமானம். எனவே தயிர் அதிகம் சேர்த்துக்கொள்வது  நல்லது.

பசலைக்கீரைக்கு கணையத்தினை புற்று நோயிலிருந்து கூட பாதுகாக்கும் திறன் உண்டு. வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்ள  வேண்டும்.

பூண்டில் உள்ள அலிசின் எனும் பயோஆக்டிவ் சத்து, கணையத்தில் உருவாகும் கட்டிகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது. உணவில் பூண்டு சேர்ப்பதால், காயங்கள் மற்றும் கட்டிகளிலிருந்து கணையத்தை முழுமையாகப் பாதுகாத்து, பலப்படுத்தும்.

அன்றாட உணவுகளில் சிறிதளவு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால், இன்சுலினைச் சரியாகச் சுரக்க உதவுகிறது.

புரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கணையப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சிறுநீர் பாதை தொற்றுகளை நீக்கும் இயற்கை உணவுகள்!

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறியாக இருக்கும்.


சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட.

கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது.

காரட் தினமும் பச்சையாக சாப்பிடுவது நல்லது. காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றது என்று கூறுவார்கள். காரட் உங்கள் உடல்நலத்தை காக்கும் திறன் கொண்டது. மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.

தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும். இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும்.

முள்ளங்கி அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவார்கள். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது.

திங்கள், 24 செப்டம்பர், 2018

பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்

பற்களில் இருக்கும் வெண்மை கூட  ஒருவரது ஆளுமையின் திறனை சொல்லும். முறையில்லாத உணவு பழக்கங்களால் பற்களில் காணப்படும் எனாமல் மற்றும் வெண்மை தன்மை குறைந்துவிடும். எனவே குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து பற்களை வெண்மையாக பராமரிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

1) நம் உருவத்திற்கு அடையாளமாக இருக்கும் தலையின் கேசத்திற்கு மட்டுமில்லை, பற்களின் வெண்மைக்கும் பலன்அளிக்கும் ஒரு  சிறந்த பொருள் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை வாயிற்குள் ஊறி, 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் உங்கள் டூத்பிரஸ்ஸில் தேங்காய் எண்ணெய்யை படரச்செய்து அதை தேயிப்பதாலும் பலன் ஏற்படும்.

2) நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடார் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்கள் தேயிக்க வேண்டும், இப்படி செய்வது வருவதாலும் பற்கள் வெண்மை அடையும்.

3) பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் முக்கியமானது எலுமிச்சை பழம். இதனுடைய தோளை எடுத்து, பற்களில் தேய்த்து அதை கொப்பளித்து துப்ப வேண்டும். இதை ஒரு வார காலம் தொடர்ந்து  செய்து வந்தால் பற்களில் ஏற்படும் மாற்றங்களை உடனே பார்க்கலாம்.

4) நல்ல தரமுள்ள பேக்கிங் சோடாவை  வாங்கி பசையாக மாற்றி, அதை பற்களில் தினமும் தேயித்து கொப்பளித்து வர வேண்டும் இந்த முறைகளை பின்பற்றி வந்தால் பற்களில் வெண்மை பளிச்சிடும்.

சனி, 25 ஆகஸ்ட், 2018

உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ!

உடல் எடையை குறைக்க பலரும் கிரீன் டீ குடித்து வருகின்றனர். உடல் எடை குறைப்பில் ஆப்பிள் டீ பெரிதும் உதவுகிறது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

சரியான முறையில் மற்றும் சரியான அளவில் ஆப்பிளை சாப்பிட்டு வருவதன் மூலம் அதிகப்படியான எடையை குறைக்கலாம். ஆப்பிள் டீ கொழுப்புகளை எரித்து உடல் எடையை குறைக்கிறது.


ஆப்பிள் துண்டுகள் நீரில் கொதிக்க வைக்கப்படுவதால், ஆப்பிள் டீயில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது. அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, எடையை குறைப்பதற்கு நல்ல பலன்களை அளிக்கிறது

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசை!

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு பீட்சா தோசையை எப்படி எளிதாக நம் வீட்டிலேயே சமைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப், கோதுமை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, ரவை - 1/4 கப், தக்காளி - 2 கப், வெங்காயம் - 2, குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - 1 கப், உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - சிறிது, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகு தூள் - 1 டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 250 கிராம், பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்.




செய்முறை



வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, ரவை உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், பச்சைமிளகாய் சாஸ் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, அதன் மேல் கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

வியாழன், 26 ஜூலை, 2018

முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்...!

நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக ஏற்படுத்திவிட்ட தழும்புகளை போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.

கற்றாழையில் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். மேலும் இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது.

கற்றாழையில் தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.

சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து, அத்துடன் தரம் நிறைந்த மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் அளவு இணைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவி இருபது நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்தால், உடலின் சூட்டைத் தணிப்பதுடன், முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். பரு வந்ததற்கான தடம் நீங்கும்.

இயற்கையாகவே முகப்பரு மற்றும் முகப்பருவால் வரும் தடத்தைக் குறைப்பதில் தேயிலை மர எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்) பயன்படுகிறது. நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவையும் தோலிற்கு மிகவும் நல்லது.

நல்லெண்ணெயுடன் டீ ட்ரீ ஆயிலைக் கலந்து எங்கெல்லாம் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் இரவு நேரத்தில் முகத்தில் தடவி, காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். கழுவுவதற்கு முன்பு காட்டன் வைத்து துடைத்துவிட்டும் முகத்தைக் கழுவலாம். இதை தொடர்ச்சியாகச் செய்தால் முகப்பரு வந்த தடம் சுத்தமாக நீங்கும். பருவும் வராது. தோலில் இருக்கும் ஃபங்கஸ்களையும் நீக்கி, பருவைக் கட்டுப்படுத்தும்.

ஜாதிக்காய் பவுடரை காய்ச்சாத பாலில் ஊற வைத்து கல்லில் நன்றாக இளைக்க உரசி முகம் முழுதும் போடுவதால், முகம் பொலிவாவதுடன், முகப்பரு நீங்கி, பரு வந்த தடமும் மறைந்துவிடும்.